Sunday, September 11, 2016

திருப் பாடல் திரட்டு - கோயில் திரு அகவல் - 1

                      

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க                                           

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;                                                

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.   
                
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;                                      

இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்                                           

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;                                                      

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.                                       

ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு                                                      

முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே !                                           


சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !



No comments:

Post a Comment